பரணி நட்சத்திரம்
பரணி நட்சத்திர ஜோதிட பலன்கள் & குணங்கள்:- சுகபோகங்களுக்கும், கலைக்கும் உரிய கிரகமான சுக்ரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் பரணி நட்சத்திரக்காரர்கள். இவர்களின் ராசி நாதன் செவ்வாய். பிறரைக் கவர்கின்ற அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். எந்த காரியத்திலும் தனித்தன்மையோடு செயல்படும் எண்ணம் கொண்டவர்கள். தான் கஷ்டப்படுகின்ற சூழ்நிலையிலும் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்ய நினைப்பவர்கள். பிறருக்கு ஆறுதல் கூறியும், முடிந்த உதவிகளை செய்யும் மனிதநேயம் கொண்டவர்கள்.
பொதுவான குணங்கள்
அபாரமான மனோ தைரியம் நிறைந்தவர்களாகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவர்களாகவும் விளங்குவார்கள். சாஸ்திரங்களைப் பற்றி பிறருக்கு சொல்லும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகரமாக முடித்து வைப்பார்கள். சுக போக வாழ்க்கையை வாழ்பவர்கள். அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆளுமைத் திறன் உடையவர்களாக விளங்குவார்கள்.
ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறந்து விடுகிற வித்தை தெரிந்தவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் சமார்த்தியமாக கையாள்வார்கள். இசை, நடனம், நாட்டியம், ஓவியம், இயற்கை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள். விலையுயர்ந்த ஆடைகளை அணிபவர்களாகவும், வாசனைத் திரவியங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றாமல் தனது ஆறாவது அறிவால் சிந்தித்து தனக்கு எது சரி என்று படுகிறதோ அதையே பின்பற்றுவார்கள். படிப்பில் திறமைசாலிகளாக விளங்குவார்கள். சுவைகளில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு பிடிக்கும். ஏதோ பசிக்காக சாப்பிட்டோம் என்றில்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ருசியாக சமைப்பவர்களை பாராட்டும் குணம் கொண்டவர்கள்.
அதீதமான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அதுவே சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். வணிகவியல், பல், கண், காது ஆகிய மருத்தவத்துறைகள், வணிக மேலாண்மை, நிதித்துறை ஆகியவற்றில் ஜொலிப்பார்கள். சிறந்த நகைச்சுவை உணர்வை கொண்டிருப்பதால் அருகில் இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள். சோகமாக இருப்பவர்கள் கூட பரணி நட்சத்திரக்காரர்களிடம் பேசினால் டானிக் சாப்பிட்டது போல் புத்துணர்ச்சி அடைவார்கள். பயணங்களை விரும்புபவர்கள்.
உடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவார்கள். மூடக்கூடிய சூழ்நிலையில் உள்ள எந்த நிறுவனமாக இருந்தாலும், பொறுப்பேற்றுக் கொண்டு திறம்பட மீட்கும் வல்லமை கொண்டவர்கள். சமயோசித புத்தியால் பல காரியங்களை சாதிப்பவர்கள். காதல் மிகவும் பிடிக்கும். சொந்த வீடு, வாகன வசதி சுலபமாக அமையும். நீண்ட ஆயுள் பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பரணி ஒன்றாம் பாதம்:- (ஆளும் கிரகம் – சூரியன்)
பரணி நட்சத்திரத்தில் ஒன்றாம் பாதம் சூரியனின் அம்சம் நிறைந்ததாகும். தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நல்ல பேச்சுத் திறமை உள்ளவர்கள். அழகு, சுகபோகத்தில் விருப்பம் உள்ளவர்கள். சமார்த்திய குணத்தால் எதையும் தனதாக்கிக் கொள்வார்கள். கோபம், பொறுமையில்லாத குணம் கொண்டவர்கள்.
பரணி இரண்டாம் பாதம்:- (ஆளும் கிரகம் – புதன்)
இது புதன் அம்சம் பெற்றது. ஆடை, அணிகலன்களில் அதிக ஆசை கொண்டவர்கள். குடும்பப் பற்று மிகுந்திருக்கும். இசையில் நாட்டம் உண்டு. எதிலும் திருப்தியடைய மாட்டார்கள்.
பரணி மூன்றாம் பாதம்:- ( ஆளும் கிரகம் – சுக்கிரன் )
மூன்றாம் பாதம் சுக்கிரன் அம்சம் பொருந்தியது. புத்திக்கூர்மையோடு செயல்படுவார்கள். உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டோடும். எதிலும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிறரை எளிதில் நம்பமாட்டார்கள்.
பரணி நான்காம் பாதம்:- (ஆளும் கிரகம் – செவ்வாய்)
செவ்வாயின் அம்சம் பொருந்தியது நான்காம் பாதம். தலைமைப் பண்பு மிகுந்திருக்கும். அலங்காரத்திலும், ஆடம்பரத்திலும் விருப்பம் கொண்டவர்கள். சிந்தனையில் சலனம் இருக்கும். சுயமாக முடிவெடுக்க முடியாமல் தயக்கம் கொள்வார்கள். பொறாமை, நன்றியின்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லாடையில் அமைந்துள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில். தாயார் சுந்தரநாயகி. பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு இறைவனை வழிபடுகின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க செவ்வரளி மலர் கொண்டு இங்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ள வேண்டும்.