உத்திரட்டாதி நட்சத்திரம்
உத்திரட்டாதி நட்சத்திர தன்மைகள் :- உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். மீன ராசியைச் சேர்ந்தது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தச் சூழலிலும் உண்மையே பேசுவார்கள். எதிலும் நடுநிலைத் தன்மையோடு நடந்து கொள்வார்கள். சொன்ன சொல் தவறமாட்டார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளியூர் பயணங்களை விரும்புவார்கள்.
பொதுவான குணங்கள்
தான தர்மம் செய்யும் சிந்தனை உள்ளவர்கள். எதையும் தொலைநோக்குச் சிந்தனையோடு அணுகுவார்கள். இதனால் சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்த நிலைக்கு முன்னேறுவார்கள். அதிகம் பேசமாட்டார்கள். இவர்கள் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். எல்லாம் தெரிந்தும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.
போலியான வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள். நீதி, நேர்மையை விட்டு எப்போதும் விலகாதவர்கள். கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் சிறு வயதில் பெற்றோரை பிரிந்திருக்க நேரிடும். சாதுவானவர்கள். ஆனால் முன்கோபம் வந்துவிட்டால் முரட்டுத்தனமாக இருக்கும். வானவியல், மருத்துவம், ஜோதிடம், வங்கித் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
நண்பர்கள் வட்டம் பெரியதாக இருக்கும். மனைவியின் அன்பை அதிகம் எதிர்பார்ப்பவர்கள். சொந்த வாகனங்கள் இருந்தாலும் நடந்து செல்லும் எளிமை விரும்பிகள். மரம், செடி, கொடி அமைந்த அமைதியான சூழலில் வாழ விரும்புவார்கள். அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். வயதான காலத்தில் துறவறத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி முதல் பாதம்
முதல் பாதத்தை ஆட்சி செய்பவர் சூரிய பகவான். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். உண்மையாக, வெளிப்படையாக நடந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் இந்த குணத்தை எதிர்பார்ப்பார்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள். எந்தச் செயலையும் வித்தியாசமாகச் செய்து பிறரது பாராட்டுதல்களைப் பெறுவார்கள். உதவும் குணம் படைத்தவர்கள். குடும்பத்தினரிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
உத்திரட்டாதி இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்துக்கு அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். கலாச்சாரம், பண்பாட்டை மீறமாட்டார்கள். மனைவிக்கு சம உரிமை கொடுப்பார்கள். தேசப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சியை விரும்பமாட்டார்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டார்கள். நண்பர்களுக்கு அதிகம் செலவிடுவார்கள். நேரம் வரும் போது திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
உத்திரட்டாதி மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதத்திற்கு அதிபதி சுக்கிரன். எப்போதும் துருதுருவென இருப்பார்கள். எதையும் மாறுபட்ட கோணத்தோடு செய்வதால், அவை மற்றவர்களையும் கவரும், சிறப்பானதாகவும் அமையும். எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். தெய்வபக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள். சகோதர, சகோதரிகளுக்காக எதையும் செய்வார்கள். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.
உத்திரட்டாதி நான்காம் பாதம்
இதன் அதிபதி செவ்வாய் பகவான். புத்திசாலிகள். முன்கோபிகளாகவும் இருப்பார்கள். நற்குணங்களை பெற்றிருப்பார்கள். பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மதித்து நடப்பார்கள். மனைவி, பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற முனைப்பு காட்டுவார்கள். சதா சர்வ காலமும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுக்கா, தீயத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு சகஸ்ரலட்மீஸ்வரர் திருக்கோயில். தாயார் பிரகன் நாயகி, பெரிய நாயகி. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களது தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கடன்கள் பிரச்னை தீர, செல்வம், செழிக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.