மகர ராசி 

மகர ராசியின்  தன்மைகள் :- மகர  ராசி ராசி மண்டலத்தின் 10 வது  ராசியாகும்.  இதன் நிறம் கருப்பு. சனி பகவானின் ஆட்சி வீடாகும். வானில் சுறாமீன் மற்றும் எருது கலந்தது போன்ற தோற்றத்தில்  இருக்கும். மனித உறுப்புகளில் முழங்காலைக் குறிக்கும். இது பெண் தன்மை கொண்ட சர ரசியாகும். இதில் உத்திராடம் 2,3,4 பாதங்களும், திருவோணம் 4 பாதங்களும், அவிட்டம் 1,2 பாதங்களும் உள்ளது.  இதன் திசை தெற்கு. சௌம்ய குணம் கொண்டது. பஞ்ச பூதத் தத்துவங்களில் நிலத் தத்துவத்தை குறிக்கும். தமிழ் மாதங்களில் தை மாதத்தைக் கொண்டது. இதில் உச்சமடையும் கிரகம் செவ்வாய். நீசமடையும் கிரகம் குரு ஆகும். புருஷார்த்த தத்துவங்களில் இது கர்மம் எனும் பொருளைக் குறிக்கும்.

மகர ராசி காரகத்துவங்கள் :- தொடைப்பகுதி, மறைவான இடம், நெருக்கடியான இடம், தனித்த இடங்கள், காவலர் குடியிருப்பு, குப்பை மேடு, கோழைத்தனம், மோகத்தில் அதிக நாட்டம், கடற்கரை, சேறு நிரம்பிய பகுதி, பாத்திரங்கள், மசூதிகள், ஜெயில், பினவறை, குகை, குழிகள், கடற்பகுதி, தற்பெருமை, சுயநலம், பன்றித் தொழூவம், கோழிப்பண்ணை, உடன்பிறந்தவர்களின் வாழ்க்கை, ஆற்றங்கரை, குளக்கரை ஆகியன இதன் காரகத்துவங்கள் ஆகும்.

குணம் :- இரக்க சுபாவம் கொண்டவர், உணர்ச்சிவசப்படுபவர், பயப்படுபவர், நிராசையாளர், மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து அதற்கேற்ப செயல்படுபவர். தன்னம்பிக்கை கொண்டவர், செலவை குறைத்துக் கொள்வார், அதிகம் பேசமாட்டார், பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், பெரியவர்களை மதிப்பதிலும் இவர்களுக்கு நிகரே இல்லை. தன்னையும், தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவரது பாதை நல்ல பாதையாகவே இருக்கும்.

தோற்றம் :- மகர ராசிக்காரர்களின் கைகள் பரந்து காணப்படும். இவர்களுக்கு சனி மற்றும் சுக்ரனின் பார்வை இருப்பதால் இவர்களது உடல் நலன் சீராக இருக்கும்.

கல்வி :- இவர்களது அறிவு அபரிமிதமாக இருக்கும். இதனால் இவர்களுக்கு படிப்பது என்பது பிடித்த விஷயமாக இருக்கும். சாஸ்திரம், வழக்கறிஞர், விஞ்ஞானம், சங்கீதம் போன்ற படிப்புகளை படிக்கலாம்.

வேலை :- மகர ராசிக்காரர்கள் நல்ல கலைஞராக இருப்பார். எழுத்தாளர், சேவகர், கதையாசிரியர் போன்ற துறைகளில் சிறப்பான பெயர் பெறுவார். இவர்களது ஜாதகப்படி இவர்களது புகழ் ஸ்தானம் அமையும். இவர்களது ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருப்பதால் நல்ல வாழ்க்கை அமையும்.

பிசினஸ் :- வழக்கறிஞர், உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி, சுரங்கம் போன்றவைகளில் நல்ல லாபம் கிட்டும். இந்த ராசிக்காரர்கள் நல்ல வழக்கறிஞராக செயல்படுவார்.

வீடு-குடும்பம் :- தனது குடும்பத்திற்காக அதிகம் உழைப்பவர்கள் மகர ராசிக்காரர்கள். ஏராளமான கஷ்டங்களையும் அனுபவிப்பர். ஆனால் தங்களது எந்த கஷ்டத்தையும் குடும்பத்தினரிடம் சொல்லாமல், அவர்களுடன் இனிமையாக பழகுவர். தர்மம், சமுதாய சேவைகளில் அதிக நாட்டம் இருக்கும். குடும்பத்தினர் அனைவரும் இவர் பின்னே செல்வர். கருணை மற்றும் தயாள குணம் கொண்டவர்.

நட்பு :- மகர ராசிக்காரர்களுக்கு ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுடன் நட்பு வைத்துக் கொள்வது நல்லது. மேஷம், கடகம், சிம்மம், விருட்சிகம் ராசிக்காரர்களுடன் சுமூகமான உறவு நிலவும். தனுசு ராசிக்காரர்களுடன் ஒத்துவராது.

காதல் உறவு :- இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

இல்லற வாழ்க்கை :- மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையானதொரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பர். காதல், திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். இவர்களுக்கு நண்பர்களும், காதலர்/காதலி, துணைக்கு முக்கியத்துவம் தருவர்.

விருப்பங்கள் :- இவர்களுக்கு வீட்டிலேயே இருப்பதுதான் மிகவும் பிடிக்கும். வெளியில் செல்வது என்றாலே இவர்களுக்கு பிடிக்காத ஒன்று. சங்கீதம், விளையாட்டில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.

சொத்து :- தனது திறமையால் தனது லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர். எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். தர்மம் செய்ய அஞ்சமாட்டார்கள். இவர்களது செலவை குறைக்க முடியாது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே பாதி நேரம் செலவழியும். சாதாரண பண நடமாட்டம் இருக்கும்.

பலவீனம் :- மகர ராசிக்காரர்கள் சிறிது சோம்பேறிகளாக இருப்பர். இவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு. எந்த காரியத்தை எடுத்தாலும் முடிக்க முடியாதோ என்றே நினைத்து இருப்பர். எப்போதும் சிடு சிடு என்று எரிந்து விழுவர். இவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். அவ்வளவு எளிதில் அமைதியாக மாட்டார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட இவர்கள் பெரிய பெரிய வார்த்தைகளை சொல்லிவிடுவர். இதனால் பலர் இவர்களுக்கு எதிரிகளாகிவிடுவர். சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் விரதம் இருத்தல் நலம் தரும்.

உடல் ஆரோக்கியம் :- மகர ராசிக்காரர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். வாதம், தலை வலி, கால் வல, தோல் நோய், கண் குறைபாடு, தலைச்சுற்றல், ரத்த சோகை, பல் வலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வியாதியோ அல்லது இரண்டு வியாதிகளோ ஒரே நேரத்தில் வந்து தொல்லை கொடுக்கும். இவர்களுக்கு வாழ்நாளில் நிச்சயமாக ஒரு முறையாவது டைஃபாய்ட் வரும். அல்லது கீழே விழுந்து அடிபட வாய்ப்புண்டு. இவர்களுக்கு அதிகமாக நோய் வராது. மகர ராசிக்காரர் பெண்ணாக இருந்தால் கர்ப காலத்திலோ, குழந்தை பிறப்பிலோ சிக்கல் ஏற்படும். குடும்பத்தினர் யாருக்கும் உடல் குறைபாடு ஏற்பட்டால் இவரது மனம் வெகுவாக பாதிக்கும். விட்டமின் பி, சி நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

பண்பியல் தொகுப்பு :- மகர ராசிக்காரருக்கு சனி பகவானின் அருள் கிட்டும். இதனால் இவர் அதிக தைரியம் கொண்டவராக இருப்பார். இவர்கள் எந்த தோல்வியையும் அனுபவமாக எடுத்துக் கொண்டு பணியை செய்வர். ஒவ்வொரு நேரத்தையும் பயனுள்ளதாக செலவிட்டு வெற்றியை எட்டுவர். காலத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்வார். இவர்களை புரிந்து கொள்வது கடினம். சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்.

அதிர்ஷ்ட நிறம்:- மகர ராசிக்காரர்களுக்கு கருப்பு, நீலம் நிறங்கள் அதிர்ஷ்டம் கொடுக்கும். எப்போதும் கருப்பு அல்ல நீலக் கலர் துணியை உடன் வைத்திருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கல் :- நீலக்கலர் கல் அதிர்ஷ்டமாகும். இதனை தங்கத்தில் பதித்து மோதிரமாக அணியலாம்.

அதிர்ஷ்ட எண்:- மகர ராசிக்காராக்ளுக்கு 4 மற்றும் 8 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். 4 மற்றும் 8ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமே. இது தவிர 5, 6 சுபம். 3, 7 பரவாயில்லை. 1,2,9 அசுபம்.

அதிர்ஷ்ட நாள் :- இவர்களுக்கு சனி கிரகத்தின் சஞ்சாரம் இருப்பதால் இவர்களுக்கு சனிக்கிழமை உகந்த தினமாகும்.

Leave a Comment