ரேவதி நட்சத்திரம்
ரேவதி நட்சத்திர தன்மைகள் :- புதனுக்குரிய மூன்றாவது நட்சத்திரம் ரேவதி. ஜோதிட ராசிகளில் கடைசியாக வரும். மீன ராசியில் வருகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகுடையவர்களாக இருப்பார்கள். சந்தர்ப்பங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள். உள்ளுணர்வின் வாயிலாக பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். அனுபவ அறிவையும், தத்துவ அறிவையும் கொண்டு மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
பொதுவான குணங்கள்
பேச்சாற்றல்மிக்கவர்கள். எத்தனை பேர் கூடியிருந்தாலும் தனது பேச்சினால் அனைவரையும் எளிதில் கவர்வார்கள். மூலதனமே இல்லையென்றாலும் தனது மூளையின் பலத்தினால் முன்னேற்றம் காண்பார்கள். சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டவராக இருப்பார். உறவினர்களை விட அன்னியர்களிடம் அன்பு காட்டுவார்கள். சமயோஜித புத்தியால் மற்றவர்களை எளிதாக வசப்படுத்திவிடுவர்.
எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயலாற்றுவார்கள். வயதனாலும் கூட இளமைத் தோற்றத்துடன் காணப்படுவார்கள். மனைவி மீது பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். பலர் ஓவியர், படைப்பாளி, எழுத்தாளர்களாக இருப்பார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியியல், மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளில் கோலோச்சுவார்கள்.
உடன் பிறந்தவர்கள் மீது கொண்ட பாசத்தால் பூர்வீக சொத்துக்களைக் கூட விட்டுக் கொடுக்கும் குணமுள்ளவர்கள். வஞ்சகம் அறியாதவர்கள். மனதை எப்போதும் தெளிந்த நீரோடை போல் வைத்திருப்பார்கள். தாராள குணமும், இளகிய மனமும் இவர்களது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும். சமூகத்தில் ஒரு வி.ஐ.பி.யாக விளங்குவார்கள்.
ரேவதி முதல் பாதம்
இந்த பாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி செய்வதில் சிறந்து விளங்குவார்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையோடு காணப்படுவார்கள்.
ரேவதி இரண்டாம் பாதம்
இதில் பிறந்தவர்கள் பல திறமைகள் கொண்டவராக இருப்பார்கள். நிலையான புத்தி இருக்காது. எளிதில் உணர்ச்சிவப்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை விரும்பாதவர்கள். வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள்.
ரேவதி மூன்றாம் பாதம்
இதில் பிறந்தவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம்.
ரேவதி நான்காம் பாதம்
எந்த செயலையும் செய்து வெற்றி காண்பார்கள். உண்மையையே பேசுவார்கள். சுகபோகமாக வாழக்கூடியவர்கள். எதிரிகளை வெல்லும் திறமை படைத்தவர்கள். மற்றவர்களை மதிக்கவும் தெரிந்தவர்கள்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா, தாத்தயங்கார் பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தாயார் கருணாகர வல்லி அம்மன். ரேவதி நட்சத்திரக்கார்கள் தங்களது தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். நீர், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.