உத்திராடம் நட்சத்திரம் 

உத்திராடம் நட்சத்திர தன்மைகள்:- சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். நல்ல காரியங்களும், சுபகாரியங்களும் செய்வதற்கு உகந்தது என்பதால் இதை மங்கள் நட்சத்திரம் என்று சொல்வார்கள். முதல் பாதம் தனுசு ராசியிலும், மற்ற பாகங்கள் மகர ராசியிலும் அமைகிறது. தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத்திறன் இருக்கும். ஆனால் மகர ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள்.

பொதுவான குணங்கள்

இந்த ராசியில் பிறந்தவர்கள் அன்பும், இரக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையே பேசுவார்கள். மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வார்கள். எப்போதும் சுறுசுறுப்போடு இளமைத் துடிப்புடன் செயல்படுவார்கள். எங்கு சென்றால் தலைமை ஸ்தானம் இவர்களுக்காக காத்திருக்கும்.

மன உறுதி கொண்டவர்கள். மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். உள்ளதை உள்ளபடி பேசுவதால் சில தருணங்களில் கெட்ட பெயர் ஏற்க நேரிடும். தொழிலாளர்கள் நலனுக்காக போராடும் குணம் கொண்டவர்கள். இவர்களது நடத்தையும், செயலும் மற்றவர்கள் விரும்பும் வண்ணம் அமையும்.

வாழ்க்கைத் துணையிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். எந்தத் துறையில் பணி செய்தாலும் மற்றவர்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பார்கள். ஏழ்மையான குடும்பச் சூழலில் பிறந்திருந்தாலும் தங்களது கடின உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வந்து விடுவார்கள்.

உத்திராடம் முதல் பாதம்

உத்திராடம் முதல் பாதத்தை குரு பகவான் ஆட்சி செய்கிறார். அபாரமான நினைவாற்றலைக் கொண்டவர்கள். அன்பும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். புராண, இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவர்கள். ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே சிக்கென்று பிடித்துக் கொள்வார்கள். தான் கற்ற கல்வியின் மூலம், அனுபவ அறிவைக் கொண்டு பிறருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவர்கள். கணவன் மனைவிடையே பரஸ்பர புரிந்துணர்வும், அதிக பாசமும் மேலோங்கும். எந்த ஒரு முடிவையும் தனது துணையின் கருத்தைக் கேட்டுவிட்டுத்தான் எடுப்பார்கள்.

உத்திராடம் இரண்டாம் பாதம்

சனி பகவான் இதன் அதிபதி. பெற்றோர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கங்களில் புகழ் பெறுவார்கள். ஒருவருக்கு நன்மை ஏற்படுகிறதென்றால் பொய் சொல்வதற்கு தயங்கமாட்டார்கள். அடிக்கடி வாகனங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவார்கள். எதிரிகளை அடையாளம் கண்டு ஒதுக்குவார்கள். தேவையே இல்லாமல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற இயலாமல் வருத்தமடைவார்கள்.

உத்திராடம் மூன்றாம் பாதம்

இந்த பாதத்திற்கும் சனி பகவானே அதிபதியாகிறார். தவறோ சரியோ மனதிற்கு பட்டதை வெளிப்படையாகச் சொல்வார்கள். சுய சிந்தனையுள்ளவர்கள். பிறர் கண்டு பிடிக்க முடியாதவாறு தவறுகளை சமார்த்தியமாகச் செய்வார்கள். அடிக்கடி கோபப்பட்டு வருத்தமடைவார்கள். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். மற்றவர்கள் இவர்களிடம் சகஜமாக பழகுவதற்கு பயப்படுவார்கள். கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள்.

உத்திராடம் நான்காம் பாதம்

நான்காம் பாதத்தை குரு பகவான் ஆட்சி செய்கிறார். துணிச்சல்மிக்கவர்களாக இருப்பார்கள். அதிகமான தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள். மனோ தைரியம் உள்ளவர்கள். சோர்வை பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். குடும்பப் பற்றுள்ளவர்கள். மற்றவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவார்கள். வெளிநாடுகளில் நண்பர்களைப் பெற்று அதன் மூலம் ஆதாயமும் பெறுவார்கள்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில். தாயார் பிரம்ம வித்யாம்பிகை (மீனாட்சி). தங்களது தோஷங்கள் நீங்க உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டியும், குடும்ப ஒற்றுமைக்காகவும் அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

Leave a Comment