பூசம் நட்சத்திரம்
பூசம் நட்சத்திர குணங்கள்:- நவக்கிரகங்களில் நீதிமான் என்று சொல்லப்படுகிற சனீஸ்வர பகவான் அதிபதியாக ஆட்சி செய்யும் நட்சத்திரம் பூசம். சிறப்பு வாய்ந்த நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. பூசம் நட்சத்திரத்தின் ராசி கடகம். ராசி அதிபதி சந்திரன்.
பொதுவான குணங்கள்
நீதி, நேர்மை, நியாயம் இவைகளை கண்களாக பாவித்து வழி நடப்பவர்கள் பூசம் நட்சத்திரக்காரர்கள். மன உறுதியும், உடல் உறுதியையும் இயல்பாகவே பெற்றவர்கள். எந்த நெருக்கடியை சமார்த்தியமாக சமாளிப்பார்கள். எப்படிப்பட்ட சவாலான பணிகளையும் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தயவு தாட்சண்யமும், மனசாட்சிக்கு பயந்து நடக்கும் சுபாவம் கொண்டவர்கள். பிறரைக் கவரும் வசீகரத் தோற்றத்தை பெற்றிருப்பார்கள்.
பசியை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். விருந்தோம்பல் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. பிறருக்கு பகிர்ந்துளித்து உண்ணும் பண்பைப் பெற்றவர்கள். நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆன்மீக வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் துறந்துவிடும் சித்தத்தைப் பெற்றிருப்பார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பினால் முன்னேறி வாழ்வின் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.
பொறுமையை கடைப்பிடித்தாலும் சில சமயங்களில் கோபம் வந்துவிடும். ஒரு போதும் சுயமரியாதையை விட்டுத்தரமாட்டார்கள். எந்த காரியத்தையும் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெறும் குணம் கொண்டவர்கள். செய்நன்றி மறவாதவர்கள். பழமையை விரும்புவார்கள், அதே சமயம் புதுமையையும் வரவேற்பார்கள். வாழ்வின் எந்த உயர் நிலைக்கு சென்றாலும் தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். கடின உழைப்பினால் செல்வாக்குமிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள். திரைப்படத்துறை, இரும்பு ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் துறை, பெட்ரோல், டீசல், எண்ணெய் போன்ற துறைகளில் கோலோச்சுவார்கள்.
தங்களுக்கு அமைகின்ற வாழ்க்கைத் துணையிடம் அன்பைப் பொழிவார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விரும்புகிறவர்கள். சின்னச் சின்ன சபலங்கள் தோன்றினாலும் ஒரு போதும் தீய வழிகளில் ஈடுபடமாட்டார்கள். வசதியான வீடு, வாகனம் போன்றவற்றை பெறும் யோகம் கொண்டவர்கள்.
பூசம் ஒன்றாம் பாதம்
சூரிய பகவான் ஒன்றாம் பாதத்தை ஆள்கிறார். இயல்பாகவே சுறுசுறுப்பானவர்கள். நோய் நொடிகள் எளிதில் அண்டாது. தந்தையுடன் முரண்பாடுகள் ஏற்படும். பிறரிடம் திறமையாக வேலை வாங்கும் தலைமைப் பண்பைப் பெற்றிருப்பார்கள். தவறான காரியங்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உஷ்ணம் சம்பந்தமான நோய்களில் அவதியுறுவார்கள். தீர்க்க ஆயுளைப் பெற்றவர்கள்.
பூசம் இரண்டாம் பாதம்
இரண்டாவது பாதத்தை புதன் பகவான் ஆள்கிறார். பெற்றோர்களை மதித்து நடப்பார்கள். சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம். எவரிடமும் நட்போடு பழகுவார்கள். சில சமயங்களில் எதையாவது நினைத்து கவலை அடைவார்கள். பிறர் தீங்கிழைத்தாலும் நன்மை செய்யும் குணம் கொண்டவர்கள். ஒரு காரியத்தில் ஏற்படும் தடங்கல்கள், பிரச்னைகள் எதுவாயினும் பொறுமையோடு கையாண்டு திறம் செய்து முடிப்பார்கள். குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாக உழைத்து செல்வம் ஈட்டுவார்கள். புத்தகப் பிரியர்களாக இருப்பார்கள்.
பூசம் மூன்றாம் பாதம்
சுக்கிர பகவான் மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்கிறார். வாழ்க்கையில் எந்தவிதமான சோதனைகள் வந்தாலும் திறமையால் கையாண்டு வெற்றி பெறுவார்கள். எப்போதும் இளமைத் தோற்றத்துடன் வலம் வருவார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விரும்புகிறவர்கள். இயற்கை விரும்பிகள். தான, தர்மங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். வாகன விரும்பிகளாக இருப்பார்கள். தங்களது வாகனங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். பிறரிடத்தில் அன்பு காட்டுவார்கள்.
பூசம் நான்காம் பாதம்
அங்காரகன் எனும் செவ்வாய் பகவான் நான்காம் பாதத்தை ஆள்கிறார். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற கொள்கையை உடையவர்கள். வீரம் நிறைந்தவர்கள். பேச்சுத் திறனால் அனைத்து காரியங்களையும் சுலபமாக சாதித்துக் கொள்வார்கள். சுயமரியாதையும், தன்மானமும் கொண்டவர்கள். மன உறுதி இருந்தாலும் தேவையில்லாதவற்றை யோசித்து கவலை கொள்வார்கள். முன்கோபத்தால் பிறரை வருத்திவிட்டு பின்பு வருத்தம் கொள்வார்கள். எப்போது இளமையாகத் தெரிய வேண்டும் என்று எண்ணுபவர்கள். அதற்கான ஒப்பனைகளையும் செய்து கொள்வார்கள்.
பூசம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா, விளங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில். தாயார் அபிவிருத்தி நாயகி. தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அகல பூசம் நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுற்றவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறந்த பலன்களைப் பெறலாம்.