மூலம் நட்சத்திரம்
மூலம் நட்சத்திர தன்மைகள்:- நட்சத்திர வரிசையில் 17வது நட்சத்திரமாக அமைகிறது மூலம் நட்சத்திரம். இதன் அதிபதி கேது பகவான். தனுசு ராசிக்குரிய நட்சத்திரம் மூலம். அனுமானுக்குரிய நட்சத்திரம் இது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோரையும், பெரியோரகளையும் மதித்து நடக்கும் குணம் படைத்தவர்கள். கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
பொதுவான குணங்கள்
ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிறந்த கல்வியறிவையும், பேச்சாற்றலையும் பெற்றிருப்பார்கள். கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் வந்து சேரும். அனைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வேலை செய்யும் இடத்தில் நிர்வாகத்திற்கு மிகுந்த விசுவாசத்தோடு இருப்பார்கள். மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையப் பெற்றவர்கள்.
குடும்பத்தினர் மீது பாசத்தோடு இருப்பார்கள். உழைப்பதற்கு சளைக்கமாட்டார்கள். எந்த பிரச்னைகளானாலும் சாதுர்யமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். சித்தர் பீடங்களுக்கு சென்று தியானிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். தர்ம சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். பிள்ளைகளின் கல்வி விஷயத்திலும், எதிர்கால வாழ்விலும் கவனம் செலுத்துவார்கள்.
மூலம் முதல் பாதம்
செவ்வாய் இதன் அதிபதியாகிறார். எத்தனை துன்பங்கள் வந்தாலும் துவண்டு விடாமல் துணிந்து எதிர்த்து நின்று சமாளிப்பார்கள். மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள். துரோகிகளை மன்னிக்கமாட்டார்கள். மனைவியிடமும், பிள்ளைகளிடமும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். திட்டமிட்டு செலவு செய்வார்கள். எடுத்த காரியத்தை எப்படியும் நிறைவேற்றிவிடுவார்கள்.
மூலம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை சுக்கிரன் ஆட்சி செய்கிறார். குடும்ப பற்றுள்ளவர்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் பெற்றவர்கள். உண்மைக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். எதிரியைக் கூட மன்னிக்கும் குணம் பெற்றவர்கள். பல மொழிகள் கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். இரக்கக் குணம் உள்ளவர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள்.
மூலம் மூன்றாம் பாதம்
புதன் மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்கிறார். அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். பல தொழில்கள் மூலம் செல்வம் ஈட்டுவார்கள். போராட்ட குணம் கொண்டவர்கள். புதுமை விரும்பிகள். மனோதத்துவம் அறிந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு சமார்த்தியமாக நடந்து கொள்வார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். சுதந்திர விரும்பிகள்.
மூலம் நான்காம் பாதம்
இதன் அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பண்பு அதிகமிருக்கும். எல்லோரையும் நேசிப்பார்கள். வாதங்கள் செய்வதில் வல்லவராக இருப்பார்கள். எப்போதும் சிரித்த முகத்தோடு காணப்படுவார்கள். பல்துறை அறிவை பெற்றிருப்பார்கள். யாரையும் சுலபத்தில் நம்பமாட்டார்கள். தாயிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் துடிப்பாக இருப்பார்கள். எதையும் திட்டமிட்டுச் செயல்படுவார்கள்.
மூலம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், மப்பேட்டில் அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தாயார் புஷ்பகுஜாம்பாள். மூலம் நட்சத்திரக்கார்கள் தங்களது தோஷங்கள் அகல இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இசைத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பெரும் புகழ் கிடைக்கும். துர்க்கையம்மன் திருவடிகளில் மகிஷன் உருவம் உள்ளதால், செவ்வாய், வெள்ளி தோறும் ராகு காலங்களில் (42 வாரங்கள்) எலுமிச்சை பழத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.