தனுசு ராசி 

தனுசு ராசியின் தன்மைகள் :- தனுசு ராசி  கால புருஷ தத்துவப்படி ராசிக் கட்டத்தின் ஒன்பதாவது ராசியாகும். ராசிகளில் இது உபய தன்மை கொண்ட ஆண் ராசியாகும். இதன் நிறம் மஞ்சள் ஆகும்.  திசை கிழக்கு. குணங்களில் மிகவும் குரூரத் தன்மை கொண்டது. பஞ்சபூதங்களில் நெருப்புத் தன்மை கொண்டது. பாகை அளவு 240′ முதல் 270′ டிகிரி வரை வியாபித்துள்ளது. வில் அம்பு உருவம் கொண்டது. மனித உடல் உறுப்புகளில் தொடை பகுதியை குறிக்கும். குரு பகவான் ஆட்சி மற்றும் மூலத் திரிகோணம் பெறும் ராசியாகும். இதன் கால பலம் இரவு நேரமாகும். மூலம் 4 பாதங்கள், பூராடம் 4 பாதங்கள் மற்றும் உத்திராடம் 1 ஆம் பாதம் கொண்டது. புருஷார்த்த தத்துவங்களில் தர்மம் எனும் அறம் கொண்டது.

தனுசு ராசி காரகத்துவங்கள் :- ஆலயம், ஆசிரியர், மதச் சார்பான கல்வி, உயர்ந்த அறிவு, மாடி, கல்லூரி, நீதி மன்றம், யுத்த பூமி, நெருப்பு, காட்டிலாக்கா துறை, மர வியாபாரம், போர்ப்பயிற்சி, சமூக சேவை, தர்ம ஸ்தாபனங்கள், பூஜை அறை, வட்டிக்கடை, காட்டுப் பகுதி, மரங்கள் அடர்ந்த இடம், மகா மண்டபம், சத்திரங்கள், கோவிலுடன் தொடர்புடைய இடம், பூஜை பொருட்கள், புஷ்கரணி ஆகியவை இதன் முக்கிய காரகத்துவங்கள் ஆகும்.

குணம் :- எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர்கள். இவர்களது நேரடிப் பேச்சு சிலருக்குக் கசப்பாகத் தோன்றினாலும், மனதில் எந்த வஞ்சகமும் இருக்காது.

தங்கள் வாழ்க்கையில் எந்தத் தடையும் இல்லாமல் சுதந்திரமாகப் பறக்க விரும்புவார்கள்.

தத்துவார்த்தமான விஷயங்களிலும், புதிய இடங்களைப் பற்றி அறிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.  எப்போதும் சுறுசுறுப்பாகவும், சுற்றியிருப்பவர்களைத் தங்கள் நகைச்சுவையால் மகிழ்விப்பவர்களாகவும் இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் முன்னணியில் நிற்பார்கள்.  ஒரே இடத்தில்  நீண்ட நேரம் இருக்கப் பிடிக்காது. எளிதில் சலிப்படைந்துவிடுவார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விடுவார்கள். யோசிக்காமல் பேசுவதால், சில சமயங்களில் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுவார்கள்.

சொத்து:- தனுசு ராசிக்காரர்கள் கொடுக்கல் – வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். இவர்களுக்கு அதிகம் செலவாவதால் சேமிக்க இயலாது. இவர்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்புண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு. பணம் இருந்தால்தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்காகவே செலவழிப்பர். பணம் செலவாவதைக் கண்டு கண்ணீர் வடிப்பர்.

வேலை :- வழக்கறிஞர், தட்டச்சு, நடிப்பு, பொதுமக்களுடனான தொடர்பு, மருத்துவம் போன்றவற்றில் புகழ் அடைவர். எழுத்தாளரானால் அதிகம் சம்பாதிக்கலாம். நடிகனாகும் வாய்ப்பு உண்டு. அரசியலில் புகழ் பெறுவர். ராணுவத்தில் பணியாற்றும் யோகம் உண்டு. சுய தொழிலில் அதிக லாபம் அடைவர். தெற்கு-வடக்கு திசைகளில் வாசற்படி அமைந்த வீடுகளில் வாழ்வது நலம். இவர்களுக்கு 14 முதல் 21 வயது வரையிலும், 35 முதல் 42 வயது வரையிலும், 56 முதல் 63 வரையிலும் தனது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். 28-35 மற்றும் 42-49 வயது வரை ஏதோ ஒரு துறையில் முக்கிய இடத்தை வகிப்பர். 57-63 வயதில் பெரும் புகழ் அடைவர். பின்னர் இவர்களது வாழ்க்கை கஷ்ட ஜீவனமாக இருக்கும்.

பிசினஸ்:- சுய தொழில் செய்வது உத்தமம். கூட்டாளியாகவும் செயல்படலாம். தனது ஆசைப்படி தொழில் செய்யலாம். எதிலும் அதிக லாபம் கிட்டும். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். துணி, விளையாட்டு சாமான்கள் தயாரிப்பு தொழிலில் லாபம் அடைவர். ஏதாவது ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் நிலையாக இருப்பது நல்லது.

காதல் உறவு:- இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

விருப்பங்கள் :- நாடகம், உபன்யாசம் கேட்பதில் அதிக ஆர்வம் இருக்கும். சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருக்கும். இவர்களுக்கு எண்ணற்ற பொழுதுபோக்கு விஷயங்கள் இருக்கும்.

நட்பு :- தனுசு ராசிக்காரர்கள் மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருட்சிக ராசிக்காரர்களுடன் நட்பாக இருப்பர். ரிஷபம், மிதுனம், மீனம், கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுடன் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு.

இல்லற வாழ்க்கை :- தனுசு ராசிக்காரர்களுக்கு அமையும் துணைவி குணவதியாகவும், உழைப்பாளியாகவும், அமைதியானவளாகவும் இருப்பார். இவர்களது திருமண வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும். தனு ராசி கணவர் பெண்மையை மதிப்பவராக இருப்பார். கூச்ச சுபாவம் இருப்பவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்காது. தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். இவர்களுக்கு காதல், திருமணம் எல்லாமே சிறப்பாக அமையும். விரைவிலேயே திருமணம் நடைபெறும்.

கல்வி :- தனுசு ராசிக்காரர்கள் மருத்துவம், விஞ்ஞான் துறைகளில் படிக்கலாம். விஞ்ஞான் விஷயங்கள் குறித்த படிப்புகளில் சிறந்த இடத்தைப் பிடிப்பர். நடிப்பு, கலையில் ஆர்வம் இருக்கும். வெகுதூரம் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு உண்டு.

வீடு-குடும்பம் :- குடும்பத்தினர் அனைவர் மீதும் அன்பு செலுத்துவார். தன்னைவிட மூத்தவர்களை மரியாதையுடன் நடத்துவார். உறவினர்களை ஆதரிப்பார். தாய்-தந்தையை மட்டுமல்லாமல் மாமியார்-மாமனாரையும் நன்றாக கவனித்துக் கொள்ளுவார். தனது மூத்த மகனைப் பற்றி கவலை கொள்வார். தனுசு ராசிக்காரரின் சகோதரரோ சகோதரியோ இளம் வயதில் மரணமடையும் நிலை உள்ளது. இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள்.

பலவீனம் :- இவர்கள் யாரையாவது தனது முன்னோடியாக வைத்துக் கொண்டு அவர்களை பின்பற்றுவர். அழும்போதே சிரிக்கும் ஆற்றல் பெற்றவர். தனது எண்ணம் போல வாழ்வர். இவரிடம் இருக்கும் எந்த பொருளை நினைத்தும் இவர் கர்வப்படுவார். ஏதேனும் சிறிய தோல்வி என்றாலும் தன்னம்பிக்கையை இழக்கும் நபராக இருக்கலாம். சிவன், ஹனுமான் தெய்வங்களை வணங்கினால் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.

பண்பியல் தொகுப்பு :- தனுசு ராசிக்காரர்கள் எந்தவொரு காரியத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்துவர். எல்லோரும் செய்ய முடியாது என்று முடிவெடுத்து விட்ட நிலையில், அதனை செயல்படுத்தி வெற்றி காண்பர். மற்றவர்களின் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். ஆலோசனைகளையும் வழங்க மாட்டார்கள். மற்றவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிறரை அதிகம் நம்புவர். இவர்களது உடல்நிலையும், மனநிலையும் நன்றாக இருக்கும். பெரிய பெரிய லட்சியங்களை குறிக்கோளாக வைத்திருப்பர். இவர்களது சக்தியே அனுபவம்தான். எந்த தோல்வியையும் அனுபவமாக மாற்றிக் கொள்ளும் போக்கு உண்டு.

உடல் ஆரோக்கியம் :- வாதம், காய்ச்சல், மலேரியா ஆகிய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்களுக்கு தலைவலியும், நெருப்பால் ஆபத்தும் ஏற்படலாம். ஆரோக்கியமாக இருப்பார்கள். நோய் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்:- கருப்பு, வெளிர் நீலம், வெளிர் பச்சை நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாகும். கருப்பு நிறத்தை எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்:- இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21… போன்றவையும் சுபம். 5, 6 அசுபம்.

அதிர்ஷ்ட கல்:- புஷ்பராகம் அதிர்ஷ்ட கல்லாகும். திங்கட்கிழமையில் தங்க மோதிரத்தில் இந்த கல்லைப் பதித்து அணியலாம்.

அதிர்ஷ்ட நாள் :- இவர்களுக்கு வியாழக் கிழமை அதிர்ஷ்ட தினமாகும். ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய், புதன் , சனிக்கிழமைகள் இவர்களுக்கு அசுபம்.

Leave a Comment