பரணி நட்சத்திரம் 

பரணி நட்சத்திர ஜோதிட பலன்கள் & குணங்கள்:- சுகபோகங்களுக்கும், கலைக்கும் உரிய கிரகமான சுக்ரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் பரணி நட்சத்திரக்காரர்கள். இவர்களின் ராசி நாதன் செவ்வாய். பிறரைக் கவர்கின்ற அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். எந்த காரியத்திலும் தனித்தன்மையோடு செயல்படும் எண்ணம் கொண்டவர்கள். தான் கஷ்டப்படுகின்ற சூழ்நிலையிலும் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்ய நினைப்பவர்கள். பிறருக்கு ஆறுதல் கூறியும், முடிந்த உதவிகளை செய்யும் மனிதநேயம் கொண்டவர்கள்.

பொதுவான குணங்கள்

அபாரமான மனோ தைரியம் நிறைந்தவர்களாகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவர்களாகவும் விளங்குவார்கள். சாஸ்திரங்களைப் பற்றி பிறருக்கு சொல்லும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகரமாக முடித்து வைப்பார்கள். சுக போக வாழ்க்கையை வாழ்பவர்கள். அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆளுமைத் திறன் உடையவர்களாக விளங்குவார்கள்.

ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறந்து விடுகிற வித்தை தெரிந்தவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் சமார்த்தியமாக கையாள்வார்கள். இசை, நடனம், நாட்டியம், ஓவியம், இயற்கை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள். விலையுயர்ந்த ஆடைகளை அணிபவர்களாகவும், வாசனைத் திரவியங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மற்றவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றாமல் தனது ஆறாவது அறிவால் சிந்தித்து தனக்கு எது சரி என்று படுகிறதோ அதையே பின்பற்றுவார்கள். படிப்பில் திறமைசாலிகளாக விளங்குவார்கள். சுவைகளில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு பிடிக்கும். ஏதோ பசிக்காக சாப்பிட்டோம் என்றில்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ருசியாக சமைப்பவர்களை பாராட்டும் குணம் கொண்டவர்கள்.

அதீதமான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அதுவே சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். வணிகவியல், பல், கண், காது ஆகிய மருத்தவத்துறைகள், வணிக மேலாண்மை, நிதித்துறை ஆகியவற்றில் ஜொலிப்பார்கள். சிறந்த நகைச்சுவை உணர்வை கொண்டிருப்பதால் அருகில் இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள். சோகமாக இருப்பவர்கள் கூட பரணி நட்சத்திரக்காரர்களிடம் பேசினால் டானிக் சாப்பிட்டது போல் புத்துணர்ச்சி அடைவார்கள். பயணங்களை விரும்புபவர்கள்.

உடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவார்கள். மூடக்கூடிய சூழ்நிலையில் உள்ள எந்த நிறுவனமாக இருந்தாலும், பொறுப்பேற்றுக் கொண்டு திறம்பட மீட்கும் வல்லமை கொண்டவர்கள். சமயோசித புத்தியால் பல காரியங்களை சாதிப்பவர்கள். காதல் மிகவும் பிடிக்கும். சொந்த வீடு, வாகன வசதி சுலபமாக அமையும். நீண்ட ஆயுள் பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பரணி ஒன்றாம் பாதம்:- (ஆளும் கிரகம் – சூரியன்) 

பரணி நட்சத்திரத்தில் ஒன்றாம் பாதம் சூரியனின் அம்சம் நிறைந்ததாகும். தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நல்ல பேச்சுத் திறமை உள்ளவர்கள். அழகு, சுகபோகத்தில் விருப்பம் உள்ளவர்கள். சமார்த்திய குணத்தால் எதையும் தனதாக்கிக் கொள்வார்கள். கோபம், பொறுமையில்லாத குணம் கொண்டவர்கள்.

பரணி இரண்டாம் பாதம்:- (ஆளும் கிரகம் – புதன்)

இது புதன் அம்சம் பெற்றது. ஆடை, அணிகலன்களில் அதிக ஆசை கொண்டவர்கள். குடும்பப் பற்று மிகுந்திருக்கும். இசையில் நாட்டம் உண்டு. எதிலும் திருப்தியடைய மாட்டார்கள்.

பரணி மூன்றாம் பாதம்:- ( ஆளும் கிரகம் – சுக்கிரன் )

மூன்றாம் பாதம் சுக்கிரன் அம்சம் பொருந்தியது. புத்திக்கூர்மையோடு செயல்படுவார்கள். உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டோடும். எதிலும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிறரை எளிதில் நம்பமாட்டார்கள்.

பரணி நான்காம் பாதம்:- (ஆளும் கிரகம் – செவ்வாய்)

செவ்வாயின் அம்சம் பொருந்தியது நான்காம் பாதம். தலைமைப் பண்பு மிகுந்திருக்கும். அலங்காரத்திலும், ஆடம்பரத்திலும் விருப்பம் கொண்டவர்கள். சிந்தனையில் சலனம் இருக்கும். சுயமாக முடிவெடுக்க முடியாமல் தயக்கம் கொள்வார்கள். பொறாமை, நன்றியின்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லாடையில் அமைந்துள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில். தாயார் சுந்தரநாயகி. பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு இறைவனை வழிபடுகின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க செவ்வரளி மலர் கொண்டு இங்கு அர்ச்சனை செய்து  வேண்டிக் கொள்ள வேண்டும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:-

இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள்  லீ, லு, லே, லோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் சொ, சௌ ஆகியவை.

குண அமைப்பு:-

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும்.

எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும் போது சரியாக காலை வாரி விடுவீர்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பீர்கள். புத்தக புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.

குடும்பம்:-

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற் கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். வாழ்க்கைத் துணையையும், பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.

தொழில்:-

எந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும்.

வணிகவியல், பல், கண், காது ஆகிய துறைகளிலும் வணிக மேலாண்மை, பைனான்ஸ் போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.

நோய்கள்:-

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வாழ்க்கையில் எதையும் புரிந்து கொண்டு அளவோடு வாழும் போது மேற்கண்ட பிரச்சினைகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்.

திசை பலன்கள்:-

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

இரண்டாவது திசையாக வரும் சூரிய திசை காலங்களில் சுமாரான நற்பலன்களையேப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள்.

சந்திரன் திசை 3வது திசையாக வருவதால் இதிலும் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும்.

செவ்வாய் திசையில் பூமி மனை வாங்கும் யோகம்  மனைவி வழியில் அனுகூலம் உண்டு. ராகு திசை 5வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும்

ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், சமுதாயத்தில் நல்ல உயர்வினையும் பெற முடியும். செல்வம் செல்வாக்கும் உயரும்.

ஆறாவது திசையாக வரும் குரு திசை மாரக திசையாகும். ஆனால் குரு திசை காலங்களே மேலும் முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு பலம் பெற்று அமைந்து விட்டால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.

மேற்கூறிய திசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதம் இரவு 10.00 மணி சுமாருக்கு வானத்தின் உச்சியில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து முக்கோண வடிவில் தோற்றமளிக்கும். பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நற் காரியங்கள்:-

இசை, ஒவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, நடன அரங்கேற்றம் செய்ய, தீர்த்த யாத்திரை செய்ய, மூலிகை செடிகளை பயிரிட மற்றும் ரோஜா உள்ளிட்ட முற்செடிகளை நட பரணி நட்சத்திரம் நல்லது.

வழிபாட்டு ஸ்தலங்கள்:-

திருவாரூர், திருத்துறைப்பூண்டி பாதையில் கச்சனத்துக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது.

கும்ப கோணத்திலிருந்து சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபாடு செய்யலாம்.

திரு ஆவினன் குடியில்  உள்ள ஸ்தல மரமான நெல்லி மரத்தையும் வழிபடலாம்.

சென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில்  வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு, முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.

கூற வேண்டிய மந்திரம்:-

ஓம் கார்த்யாயின்யை ச வித்மஹே

கன்யாகுமாரி ச  தீமஹி

தன்னோ துர்கி பிரசோதயாத்

 

Leave a Comment