மிருகசீரிஷம் நட்சத்திரம்
மிருகசீரிடம் நட்சத்திர குணங்கள்:– 27 நட்சத்திரங்கள் வரிசையில் 5வதாக வருகின்ற நட்சத்திரம் மிருகசீரிடம். இதன் அதிபதி செவ்வாய் பகவான். இரண்டு ராசிகளில் இடம்பெறுகின்ற நட்சத்திரம் இது. முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் இடம்பெறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துணிச்சல்காரர்களாக இருப்பார்கள். தேசப்பற்றுக் கொண்டவர்கள்.
பொதுவான குணங்கள்
எதிலும் முழுமையான நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள். மன உறுதி நிறைந்தவர்கள். வலிமையான உடற்கட்டைப் பெற்றிருப்பார்கள். சுறுசுறுப்பானவர்கள். எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பார்கள். பெற்றோரிடம் பாசம் கொண்டவர்கள். கற்பனை வளம் நிறைந்திருப்பதால் அடிக்கடி கனவுலகத்தில் மூழ்கிவிடுவார்கள்.
தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையேச் செய்வார்கள். எந்த சவால்கள் வந்தாலும் எடுத்த காரியத்தை துணிச்சலாக எதிர்கொண்டு முடிப்பார்கள். பெரியோர்களை மதித்து நடப்பார்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். விருப்பப்படி வாழ்க்கைத்துணை அமையும்.
குடும்ப எதிர்காலத்திற்காக கடுமையாக உழைப்பார்கள். எந்த விஷயத்தையும் கிரகிப்பதில் கில்லாடிகள். எங்கிருந்தாலும் தனித்தன்மையோடு முதன்மை ஸ்தானத்தைப் பெறுவார்கள். நல்ல வசதியான இடத்தில் வாழ்க்கைத்துணை அமையும். ஆடம்பரமான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள். சோதனைகள் அடுக்கடுக்காக வந்தாலும் கூட அதை அநாயசமாக கடந்துவிடுவார்கள். விட்டுக் கொடுக்கும் குணத்தால் பெரிய நண்பர்கள் வட்டத்தைப் பெற்றிருப்பார்கள்.
மிருகசீரிடம் முதல் பாதம்:-
இதன் அதிபதி சூரியன் பகவான். துணிச்சல்மிக்கவர்கள் என்பதால் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். நினைத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். போராட்ட குணமிக்கவர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். பழமையை நேசிப்பதுடன் புதுமையையும் வரவேற்பார்கள். தங்களது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து கட்டமைத்துக் கொள்வார்கள்.
மிருகசீரிடம் இரண்டாம் பாதம்:-
இரண்டாம் பாதத்தை ஆட்சி செய்பவர் புதன் பகவான். இதில் பிறந்தவர்கள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். சொந்த முயற்சியால் முன்னேற்றத்தை அடைவார்கள். எந்த நெருக்கடி வந்தாலும் உண்மைக்கு புறம்பாக பேசமாட்டார்கள். தன்மானச் சிங்கங்களாக வாழ்வார்கள். அறிவாற்றலால் அரசாங்கத்திலும், பெரிய நிறுவனங்களிலும் ஆலோசகராக பணிபுரிவார்கள். ஆன்மீகப் பணிகளிலும், அறப்பணிகளிலும் ஆர்வம் உள்ளவர்கள்.
மிருகசீரிடம் மூன்றாம் பாதம்:-
இதன் அதிபதி சுக்கிரன் பகவான். இதில் பிறந்தவர்கள் அழகான தோற்றத்துடன் காணப்படுவார்கள். வாழ்க்கையை இயல்பாக எடுத்துக் கொள்வார்கள். கிடைத்ததை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்பவர்கள். தீவிர ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். எந்த சூழலிலும் கலங்காத தைரியத்தைப் பெற்றிருப்பார்கள். மனைவி, குழந்தைகளை மிகவும நேசிப்பார்கள். பொதுநலன்களில் ஈடுபாடு காட்டுவார்கள்.
மிருகசீரிடம் நான்காம் பாதம்:-
நான்காம் பாதத்தை ஆட்சி செய்வது செவ்வாய் பகவான். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் உண்மையே பேசுவார்கள். தவறுகளை சுட்டிக் காட்ட தயங்கமாட்டார்கள். சிறிய வயதிலேயே பல ஏமாற்றங்களைக் காண்பார்கள். ஆனாலும் அதைக் கண்டு அஞ்சமாட்டார்கள். நகைச்சுவை உணர்விமிக்கவர்கள். வாதத்திறமை உள்ளவர்கள். எதையும் சமார்த்தியமாக எதிர்கொள்வார்கள். பணி செய்யும் இடத்தில் நேர்மையுடன் செயல்படுவார்கள். அதனால் மற்றவர்கள் மதிப்புக்கு ஆளாவார்கள்.
மிருகசீரிட நட்சத்திரக் கோவில்:-
திருவாரூர் மாவட்டம், எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி. தங்களது தோஷங்கள் அகல மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், திருமணத்தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள், தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வேண்டுவோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மரண சம்பவங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள் நீங்க பௌர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள் இத்தலம் வந்து புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன்களைப் பெறலாம்.