திருவாதிரை நட்சத்திரம் 

திருவாதிரை நட்சத்திர குணங்கள்:- திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானின் அம்சமான நடராஜர் அவதரித்த நட்சத்திரம். சர்ப்ப கிரகங்களில் ராகுவின் சாரம் பெற்றுள்ள நட்சத்திரம் இது. சரியான காரியவாதியாக இருப்பார்கள். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி மாற்றி பேசுவதில் வல்லவர்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுபவர்களாக இருப்பதால் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். எதிரிகள் குறைவு தான். முன்கோபி. உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே பேசத் தெரியாதவர்கள். எதையும் வெளிப்படையாக கொட்டி விடுவார்கள்.

பொதுவான குணங்கள் 

தன் பிள்ளை தன் குடும்பம் என்று சற்று சுயநலமாக இருப்பார்கள். தெரியாத விஷயத்தைக் கூட தெரியும் என்பதைப் போல பேசுவார்கள். நல்லவைகளுக்காக பொய் பேச தயங்காதவர்கள். சில சமயங்களில் வாக்குவாதங்களினால் நண்பர்களைக் கூட இழப்பார்கள். அபார ஞாபக சக்தி இருப்பதால் விழுந்து விழுந்து படிக்காமல் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதே உள்வாங்கிக் கொள்வார்கள். நட்பே உயர்ந்தது என்ற குணம் படைத்தவர்கள்.

கற்பனை வளம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். காதல் திருமணம் செய்பவராகவும், மனைவியை அதிகம் நேசிப்பவராகவும் திகழ்வார்கள். சமயோஜித புத்தியால் மார்க்கெட்டிங் துறையிலும், ரியல் எஸ்டேட் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். மக்கள் தொடர்பு, காவல், சுற்றுலா, தொலைபேசி, கனரக மின் ஆற்றல், நிலக்கரிச் சுரங்கம் போன்ற துறைகளில் மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் யோகம் பெற்றவர்கள்.

எந்த வேலையையும் உன்னிப்பாக கவனத்தோடு செய்வார்கள். இதன் வாயிலாக விரைவிலேயே மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெற்று முன்னேறுவார்கள். சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். மனதில் எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். சிலர் மடாதிபதிகள், பள்ளித் தாளாளர்களாக விளங்குவார்கள். நீண்ட ஆயுள் பலம் பெற்றவர்கள். ஆன்மீகத்தில் சிறந்த ஈடுபாடு இருக்கும்.

திருவாதிரை ஒன்றாம் பாதம்

முதல் பாதம் குரு பகவான் ஆதிக்கம் பெறுகிறது. பழமை விரும்பிகளாக இருப்பார்கள். எதையும் ஒளிவு மறைவின்றி நேர்பட பேசுவார்கள். தலைமைப் பதவி தேடி வரும். சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து பண்டிதர்களாக விளங்குவார்கள். யாரிடமும் இயல்பாக பழகுவார்கள். மூத்தவர்களின் நட்பும், வழிகாட்டுதலும் கிடைக்கும். ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு காட்டுவார்கள். சிறந்த பேச்சாற்றலால் பட்டிமன்றம், விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைவார்கள். சிலர் ஆன்மீக சொற்பொழிவாற்றி அதன் வாயிலாக செல்வத்தையும், பெயரும் பெறுவார்கள். வாழ்க்கை துணையின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

திருவாதிரை இரண்டாம் பாதம்

சனி பகவான் இரண்டாம் பாதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். எதிலும் நேர்மையோடு செயல்படுவார்கள். விதிகளை மதித்து நடந்து கொள்வார்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். நிதானமாக பேசும் இவர்கள் வாழ்க்கையில் இன்பமானாலும் சரி, துன்பமானாலும் சரி சம நிலையை இழக்காமல் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறந்த விளையாட்டு வீரர்களாக புகழ் பெறுவார்கள். சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாக பேசி பிறர் மனதை புண்படுத்திவிடுவார்கள்.

திருவாதிரை மூன்றாம் பாதம்

மூன்றாம் பாதத்தையும் சனி பகவானே ஆட்சி செய்கிறார். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். நெருங்கியவர்களின் துரோகத்திற்கு ஆளாவார்கள். சிறு வயதிலேயே பல கஷ்டங்களை அனுபவித்ததால் உறுதிய மனமும், பண்பட்ட குணமும் நிறைந்திருக்கும். தெய்வ பக்தியால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள். யோகிகள், சித்தர்கள், மகான்கள் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் ஏற்படும். இவர்களுக்கு சகோதரர்களை விட சகோதரிகளே உறுதுணையாக இருப்பார்கள். மருத்துவ மூலிகைகள், பாராம்பரிய சிகிச்சைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

திருவாதிரை நான்காம் பாதம்

திருவாதிரை நான்காம் பாதத்தை குரு பகவான் ஆட்சி செய்கிறார். தெய்வகடாட்சம் நிரம்பியவர்களாக இருப்பார்கள். அதிர்ஷ்டங்கள், யோகங்கள் மூலம் லாபங்கள் கிட்டும். அநியாயத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். அநியாயக்காரர்களை அடக்கும் திறன் பெற்றவர்கள். சேவை மனப்பான்மை கொண்டவர்கள். உயர்ந்த அரசு பதவிகளைப் பெறுவார்கள். பதவியை சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் நேர்மையாக நடந்து கொள்வார்கள். இயற்கை உணவு விரும்பிகளாக இருப்பார்கள். குழந்தைகளிடம் அதீத பாசம் காட்டுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா, அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில். தாயார் சுந்தர நாயகி. திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் அகல இத்தலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர். எம பயம் கொண்டவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்ஞ்சய ஹோமம் இங்கு அதிகளவில் செய்யப்படுகிறது. திருமணத் தடை எந்த தோஷத்தால் ஏற்பட்டிருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் பலன் நிச்சயம்.

 

Leave a Comment