ஆயில்யம் நட்சத்திரம்
ஆயில்யம் நட்சத்திர குணங்கள்:- ஆயில்யம் நட்சத்திரத்திற்கு புதனும், சந்திரனும் அதிபதிகள். இது கடக ராசியின் நட்சத்திரம். சமயோஜித புத்தி கொண்டவர்கள். இனிமையாக பேசுபவர்கள். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள். பிறரை எடை போடுவதில் வல்லவர்கள். சிறந்த அறிவாற்றலைக் கொண்டவர்கள். வாழ்வில் வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள்.
பொதுவான குணங்கள்
மன வலிமையும், உடல் வலிமையும் ஒருங்கேப் பெற்றவர்கள். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவைக் கொண்டவர்கள். ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்ற ஒரு சொல் இருக்கிறது. ஆனால் பண்டைய சாஸ்திரங்களில் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை. மற்றவர்கள் ஆலோசனையை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். தனக்கு எது சரி என்று படுகிறதோ அதையே தான் செய்வார்கள்.
ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடித்துவிட்டுத் தான் அமர்வார்கள். எதிரிகளை கண்டு அஞ்சாதவர்கள். நியாத்தையும், தர்மத்தையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பார்கள். இயற்கை விரும்பிகளாக இருப்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். இளவயதிலேயே திருமண வாழ்க்கை இவர்களுக்கு அமையும்.
சிறுவயதில் வறுமையில் போராடினாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். அவர்களுக்காக அதிக செலவுகள் செய்வார்கள். திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவார்கள். வேலை செய்யும் இடத்தில் நேர்மை, நாணயம், விசுவாசத்துடன் நடந்து கொள்வார்கள். மனசாட்சியோடு நடந்து கொள்வார்கள். ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டாலும் தவறிழைக்க மாட்டார்கள். நீண்ட ஆயுள் பலத்தைப் பெற்றவர்கள்.
ஆயில்யம் ஒன்றாம் பாதம்
இது குருவின் அம்சம் பொருந்தியது. இதில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதில் முனைப்புடன் செயல்படுவார்கள். கோபமும் இருக்கும், குணமும் இருக்கும். மற்றவர்கள் புகழ்வதை விரும்புகிறவர்கள்.
ஆயில்யம் இரண்டாம் பாதம்
சனி பகவான் இதன் அதிபதியாவார். சுகபோகங்களை அனுபவிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்தி பேசுவார்கள். தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகச்சரியாக செய்வார்கள்.
ஆயில்யம் மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதத்தை ஆள்பவரும் சனி பகவான் தான். முன்கோபிகள், செல்வத்தை எந்த வழியிலாவது அடைய முயற்சிப்பார்கள். மற்றவர்கள் அறிவுரையை கேட்கமாட்டார்கள். தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் குணமுடையவர்கள்.
ஆயில்யம் நான்காம் பாதம்
இதன் அதிபதி குரு பகவான். புத்திசாலிகள் தான் ஆனால் சோம்பேறிகள். எதிர்மறையாக சிந்திக்கக் கூடியவர்கள். நோகாமல் நுங்கு திங்க ஆசைப்படுபவர்கள். எந்தச் செயலைச் செய்தாலும் திட்டமிட்டு செய்யமாட்டார்கள். ஆயில்யம் நான்காம் பாதத்தில் பிள்ளைகள் பிறந்தால் பெற்றோர்களுக்கு துன்பம் வரும் என்பதால் ‘சந்திர சாந்தி’ என்ற பூஜையை செய்வது நலம்.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருந்துதேவன்குடியில் அமைந்திருக்கிறது அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில். தாயார் அபூர்வ நாயகி, அருமருந்து நாயகி. ஆயில்யம் நட்சத்திரக்கார்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கிரக தோஷங்கள் நீங்க கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இந்த எண்ணெய்யை உட்கொண்டால் நோய்கள் நீங்குகிறது என்பது ஐதீகம்.