பூரம் நட்சத்திரம் 

பூரம் நட்சத்திர தன்மைகள் :- பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். ராசி சூரியன். காண்பவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டவர்கள். யதார்த்தமானவர்கள். ஆன்மிகத் தேடல் இருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்கள். கருணையும், இரக்கமும் கொண்டவர்கள். பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். எதையும் முன்கூட்டியே அறிவும் திறன் பெற்றவர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள். சற்று முன்கோபிகளாக இருப்பார்கள்.

பொதுவான குணங்கள்:- கடல் கடந்து சென்று வணிகம் செய்யும் அமைப்பைப் பெற்றவர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சிறந்து விளங்குவார்கள். தத்துவத்தில் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோரை மதிக்கக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக பம்பரமாக சுழல்வார்கள். எந்த வேலையும் உடனே செய்து முடித்து விடுவார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்கள்.

புத்திசாலிகளாகவும், எதிரிகளை வெல்லும் திறமை படைத்தவர்களாகவும் விளங்குவார்கள். கடின உழைப்பினால் புகழையும், பொருளையும் ஈட்டுவார்கள். உறவினர்களையும், நண்பர்களையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். மத்திம வயதில் வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். செய்த நன்றியை மறக்கமாட்டார்கள். பங்குச்சந்தையில் வருவாய் வரும் வாய்ப்புள்ளது. சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணம் உள்ளவர்கள். நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

மற்றவர்கள் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். தான தர்மங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். சிறந்த குடும்பஸ்தராகவும், பெரிய வியாபாரியாகவும் அரசியல் ஆதாயம் பெறுபவராகவும் இருப்பார்கள்.

பூரம் ஒன்றாம் பாதம்

முதல் பாதத்தை சூரியன் ஆட்சி செய்கிறார். நல்ல திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த நினைவாற்றலும், பேச்சாற்றலும் உடையவர்கள். எந்த விஷயத்தையும் போராடி எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று உழைக்கக் கூடியவர்கள். வாழ்க்கையில் நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பார்கள்.

பூரம் இரண்டாம் பாதம்

இரண்டாம் பாதத்தை புதன் ஆட்சி செய்கிறார். அனைத்து திறமைகளும் இருந்தாலும் கூட நிறைய தோல்வியை எதிர்கொள்வார்கள். தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்ற எண்ணம் கொண்டவர்கள். தோல்வியை தாங்கமாட்டார்கள். பிறரை சார்ந்து வாழ நினைப்பவர்கள். தெய்வ பக்தி கொண்டவர்கள்.

பூரம் மூன்றாம் பாதம்

சுக்கிரன் இதன் அதிபதியாகிறார். ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். பேராசைக்காரர்கள். பிறரைப் பற்றி கவலை கொள்ளாமல் தனது முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக வைத்துக் கொள்வார்கள்.

பூரம் நான்காம் பாதம்

செவ்வாய் நான்காம் பாதத்தை ஆட்சி செய்கிறார். எதிலும் அவசரம் காட்டுபவர்கள். எவ்வளவு வேகத்தில் சேமிக்கிறார்களோ அதே அதை செலவும் செய்து விடுவார்கள். திட்டமிடுதல் இருக்காது. தெரியாமல் செய்யும் தவறுகளால் பல இன்னல்களை அனுபவிப்பார்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி வந்தால் துன்பங்கள் நீங்கும்.

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில். தாயார் பிரஹன் நாயகி (பெரியநாயகி). தங்களது தோஷங்கள் நீங்க பூரம் நட்சத்திரக்கார்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கிரக தோஷம், நாக தோஷம், மன நோயாளிகள் அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.

Leave a Comment