கேட்டை நட்சத்திரம்

கேட்டை நட்சத்திர தன்மைகள்:- நட்சத்திர வரிசையில் 18வது நட்சத்திரமாக வருவது கேட்டை நட்சத்திரம் ஆகும். புதனுக்குரிய நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாக வரும் கேட்டை. விருச்சிக ராசியைச் சார்ந்தது. இதன் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரக்காரர்கள் மன தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னாடி நிற்பவர்கள். இயல்பாகவே சிறந்த குணங்களைப் பெற்றிருப்பார்கள். ஆனால் முன்கோபியாக இருப்பார்கள். அவசரத்தில் வார்த்தைகளை படபடவென்று கொட்டிவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள். கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள் என்ற பழமொழி உண்டு. கோட்டையை ஆள்கிறார்களோ இல்லையோ கோட்டையில் ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். எப்போதும் முக மலர்ச்சியுடன் காணப்படுவார்கள்.

பொதுவான குணங்கள்

செல்வத்தைச் சேர்ப்பதில் முனைப்பு காட்டுவார்கள். இருந்தாலும் சில சமயங்களில் ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதற்கேற்ப கிடைத்தவற்றைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்கமாட்டார்கள். இனிய சுபாவமும், அழகிய தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். குரு இல்லாமலேயே வில் வித்தையைக் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த முயற்சியிலேயே முன்னேறும் குணம் கொண்டவர்கள்.

தேவேந்திரன் அவதரித்தது இந்த கேட்டை நட்சத்திரத்தில் தான். நுண்ணறிவையும், கல்வியும், பேச்சுத் திறனையும் திறம்பட பெற்றிருப்பார்கள். உறவினர்களால் வஞ்சிக்கப்படுவார்கள். எதிர்காலத்தை உணர்ந்து செயலாற்றுவார்கள். குடும்பத்தினரிடம் பாசத்தைக் காட்டினாலும் கண்டிப்புடனும் நடந்து கொள்வார்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

கேட்டை 1ம் பாதம்

நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – குரு.  உழைப்பதற்கு சளைக்கமாட்டார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். பிரச்னைகளை தைரியமாக எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் வல்லவர்கள். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். நண்பர்கள் பிரச்னைகளை முன்நின்று தீர்த்து வைப்பார்கள். மற்றவர்களிடம் சிறந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள். இதனால் அவர்களது அன்பையும், ஆதரவையும் பெறுவார்கள்.

கேட்டை 2ம் பாதம்

நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – சனி.

ஏழை, எளியோர்க்கு உதவும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். குடும்ப பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயலாற்றுவார்கள். நீதியையும், நேர்மையையும் இரு கண்களாக பாவித்து நடப்பார்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்கள் சொல்வதை கேட்டு முடிவு செய்யாமல் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். விளையாட்டில் இருக்கின்ற ஆர்வம் கல்வியில் இருக்காது. எந்த வேலையையும் சிறப்பாக செய்ய வேண்டு என்ற எண்ணம் கொண்டவர்கள். முன்கோபத்தால் மற்றவர்கள் மனதை அடிக்கடி புண்படுத்திவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பார்கள். எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

கேட்டை 3ம் பாதம்

நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – சனி.

கேட்டையின் மூன்றாம் பாதத்திற்கு நவாம்ச அதிபதியாக விளங்குபவர் கும்ப சனி. எப்போதும் அமைதியாக இருப்பார்கள். பொறுமையோடும், நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள். சண்டை சச்சரவுகளிலிருந்து விலகியிருக்க நினைப்பவர்கள். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்களாக இருப்பார்கள். முதுகில் குத்துபவர்களை கண்டால் ஒதுக்கி விடுவார்கள். மற்றவர்களைப் பற்றி புறம் பேசாமல் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசும் குணம் படைத்தவர்கள். இயற்கை உணவு விரும்பியாக இருப்பார்கள்.

கேட்டை 4ம் பாதம்

நட்சத்திர அதிபதி – புதன், ராசி அதிபதி செவ்வாய், நவாம்ச அதிபதி – குரு.

ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் கறாராகப் பேசுவார்கள். அன்பும், கனிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெற்றோர்களிடம் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்வார்கள். உடன்பிறப்புக்களின் நலனுக்காக பாடுபடுவார்கள். ஆன்மீக அறிஞர்களின் தொடர்பால் மனம் பண்பட்டவர்களாக விளங்குவார்கள். வீடு, வாகனம் என அனைத்து வசதிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில். இது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவிலுள்ள பசுபதி கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. கேட்டை நட்சத்திரக்கார்கள் தங்களது ஜாதக தோஷங்கள் நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர்.

Leave a Comment