பூரட்டாதி நட்சத்திரம் 

பூரட்டாதி நட்சத்திர தன்மைகள் :- பூரட்டாதி நட்சத்திரன் அதிபதி குரு பகவான் ஆவார். முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும், நான்காவது பாதம் மீன ராசியிலும் இடம் பெறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். விமர்சனத்திக்குள்ளாவார்கள். இவர்களும் மற்றவர்களை விமர்சிப்பார்கள். தங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அதை சகித்துக் கொள்ளமாட்டார்கள்.

பொதுவான குணங்கள்

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வார்கள். எதையும் நிதானமாக கையாளும் முதிர்ச்சி பெற்றவர்கள். எல்லாம் தெரிந்திருந்தும் வெளியே அலட்டிக் கொள்ளமாட்டார்கள். நான் பிடித்து முயலுக்கு மூன்று கால் என்று வாதிடாமல் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்கள் நலனில் அக்கறை கொள்வார்கள். சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள்.

குடும்பப் பற்று குறைவு தான். ஆன்மீகம், துறவறம், தத்துவம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்கள். காலத்துக்கேற்ப மாற இயலாதவர்கள். தான் கொண்ட கொள்கையில் இருந்து மாறமாட்டார்கள். எதையும் சிந்தித்து செயல்படுவார்கள். இவர்களில் சில பேர் சித்தர்களாகவும், மகான்களாகவும் இருப்பார்கள்.

கல்வியாளர், அறிவியல் அறிஞர், பேராசிரியர், ஆசிரியர் ஆகிய பணிகளில் இருப்பார்கள். சிலர் கல்லூரி, பயிற்சி நிறுவனங்கள் நடத்துபவராகவும் இருப்பார்கள். சிறு வயதிலேயே மிகப்பெரிய அனுபவங்களையும், கசப்பான உணர்வுகளையும் சந்திப்பார்கள். எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். யாரையும் தொந்தரவு செய்யாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வார்கள்.

பூரட்டாதி முதல் பாதம்

முதல் பாதத்தை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி நிறைந்தவர்கள். வலிமையானவர்களாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள். குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.

பூரட்டாதி இரண்டாம் பாதம்

இதன் அதிபதி சுக்கிர பகவான். வசீகரத் தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். எந்தச் சூழலிலும் பொய் பேச மாட்டார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எடுத்த காரியத்தை முடிக்க எல்லா முயற்சிகளிலும் இறங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அனைவராலும் விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பூரட்டாதி மூன்றாம் பாதம்

மூன்றாம் பாதத்தை ஆட்சி செய்பவர் புதன் பகவான். இதில் பிறந்தவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார்கள். தர்மத்தின் வழியில் நடப்பவர்கள். கற்பனை சக்தி நிறைந்திருக்கும். உணவுப்பிரியர்களாக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் நாட்டம் உடையவர்கள்.

பூரட்டாதி நான்காம் பாதம்

சந்திர பகவான் இந்த பாதத்தை ஆட்சி செய்கிறார். உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையே பேசுவார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக விளங்குவார்கள். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தொழில்முனைவோராக இருப்பார்கள், தொழிலில் நாட்டம் கொண்டவராகவும் திகழ்வார்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா, திருக்காட்டுப்பள்ளி, ரங்கநாதபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருவானேஷ்வரர் திருக்கோயில். தாயார் காமாட்சி அம்மன். பூரட்டாதி ராசிக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இசைத்துறையில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

Leave a Comment