அடிப்படை ஜோதிடம் – பாடம் 4.

பாதகாதிபத்யம், பாதகாதிபதி – விளக்கம்ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு லக்னம், பாதகாதிபதி மாறுபடும். ஒரு பாதகாதிபதி எந்த ஸ்தானத்தில் இருக்கிறாரோ அந்த ஸ்தானத்திற்குரிய பாதகங்களைச் செய்யும். மேலும் அந்த பாதகாதிபதி திசை நடத்தும் காலங்களில் பாதக பலன்களை செய்ய கடமைப்பட்டவர். பாதகாதிபதி மறைவு ஸ்தானங்களில் அமரும் பொலுது பாதகத் தன்மை குறைவாகச் செய்யும்.

மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு – 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.
ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம் ஆகிய லக்னங்களுக்கு – 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.
மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்னங்களுக்கு – 7 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.
பாதகாதிபதி பலம் வாய்ந்த எந்த பாவங்களில் இருக்கிறாரோ அந்த பாவங்களில் உருவாகும் பலன்களில் பாதகத்தை செய்வர் . மேலும் பாதகாதிபதி எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடத்தின் பலன்களும் பாதிக்கப்படும். இந்த பாதகாதிபதி தீமையான பலன்களை தமது தசா புக்தி காலங்களில் தருவார். பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகம் அதிக பாதகத்தை தரும் என்பது ஜோதிட விதி.

பாதகாதிபதி/ மாரகாதிபதி/ யோகாதிபதி தசை
பாதகாதிபதி தசை நடக்கின்றது அப்பொழுது அவனுக்கு பாதகமான செயல்கள் நடக்கும். அவனை அதிகம் துன்பபட வைக்கும்.
இதே போல் பார்த்தால் மாரகாதிபதி தசை எப்படி இருக்கும்?
இந்த காலங்களில் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் வரும்.
அதே போல் தான், ஒருவனுக்கு யோகாதிபதி தசை நடக்கும் போது, அனைத்து வசதிகளும் வந்து சேரும்.

போதகன்/ வேதகன்/ பாசகன்/ காரகன்
ஒரு தசையின் பலன்களை நிர்ணயம் செய்வதில் மிக முக்கியமானவர்களே இந்த போதகன், வேதகன், பாசகன், காரகன்.
தசை போதகன் வேதகன் பாசகன் காரகன்
சூரியதசை செவ்வாய் சுக்கிரன் சனி குரு
சந்திரதசை செவ்வாய் சூரியன் சுக்கிரன் சனி
செவ்வாய் தசை சந்திரன் புதன் சூரியன் சனி
குரு தசை செவ்வாய் சூரியன் சனி சந்திரன்
சுக்கிரன் தசை குரு சனி புதன் சூரியன்
சனி தசை சந்திரன் செவ்வாய் சுக்கிரன் குரு
புதன் தசை குரு செவ்வாய் சந்திரன் சுக்கிரன்
போதகன் : தனது தசைகளில் வரும் புத்திகளில் தனது பலனைக் கொடுக்கும்.
வேதகன் : பாவத்தின் பலனை மாறுபடச் செய்யும். [ நன்மை தருவதில்லை]
பாசகன் : பாவத்தின் பலன் கிடைக்க உதவி செய்யும்.
காரகன்: சம்பாதித்த பொருளை கிடைக்க உதவி செய்யும்.

சந்திராஷ்டமம்
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.
நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.
ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன.
ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரன் தினக்கோள் ஆகும்.
வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன.

நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.
இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.
மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள்.
நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.
ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு.
ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.
ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.
எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.
ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.
பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.
பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.
பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்
உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் : சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி – அனுஷம்
பரணி – கேட்டை
கிருத்திகை – மூலம்
ரோகிணி – பூராடம்
மிருகசீரிஷம் – உத்திராடம்
திருவாதிரை – திருவோணம்
புனர்பூசம் – அவிட்டம்
பூசம் – சதயம்
ஆயில்யம் – பூரட்டாதி
மகம் – உத்திரட்டாதி
பூரம் – ரேவதி
உத்திரம் – அஸ்வினி
அஸ்தம் – பரணி
சித்திரை – கிருத்திகை
சுவாதி – ரோகிணி
விசாகம் – மிருகசீரிஷம்
அனுஷம் – திருவாதிரை
கேட்டை – புனர்பூசம்
மூலம் – பூசம்
பூராடம் – ஆயில்யம்
உத்திராடம் – மகம்
திருவோணம் – பூரம்
அவிட்டம் – உத்திரம்
சதயம் – அஸ்தம்
பூரட்டாதி – சித்திரை
உத்திரட்டாதி – சுவாதி
ரேவதி – விசாகம்

ஜோதிடத்தில் விதி, மதி, கதி
விதி என்பது இலக்கினம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இலக்கினம், சந்திரன், சூரியன் இம்மூன்றில் எது வலுவாக இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment